Friday, October 1, 2010

Robot review..!

படம் பார்த்த பிறகு மனதில் எழும் ஒரே கேள்வி, இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்குமா என்பது தான். ஆனால் இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கண் முன் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.



பந்தா, பில்டப் எதுவும் இல்லாத சிம்பிளான ரஜினியை பார்க்க ரொம்பவே புதிதாக இருக்கிறது. அதற்காக ரஜினி ரசிகர்களின் விரல்களுக்கும் விசிலுக்கும் வாய்ப்பே இல்லையா என யோசிக்க வேண்டாம். எந்திரன் உருவத்தில் வரும் ரஜினி, ரஜினிக்கே உரிய அசாதாரணமான ஸ்டைலில் கலக்கோ கலக்கு என கலக்குகிறார்.

உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவர் டாக்டர்.வசீகரன் (ரஜினிகாந்த்). இவர் தன்னை போலவே ஒரு ரோபோவை (சிட்டி ரோபோ) உருவாக்குகிறார். சண்டை முதல் சமையல் வரை, சிட்டிங் முதல் டான்சிங் வரை சொல்வதை எல்லாம் இந்த ரோபோ செய்யும். உலகின் அனைத்து விஷயங்களையும் இதன் மெமரியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு உணர்ச்சி இல்லை. இது உணர்வுகள் இல்லாத ஒரு மிஷின் மட்டுமே. ஒரு அடியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் இது அடித்து வீழ்த்திவிட முடியும். இதை இராணுவத்தில் சேர்த்து நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே இதனை உருவாக்கிய வசீகரனின் கனவு.

இந்த கனவு நிறைவேறினால் வசீகரனுக்கு பெருமை சேர்ந்துவிடும் என்ற கெட்ட எண்ணத்தில் அவரின் பாஸ் போரா (டேனி டென்கோன்ஸ்பா) இதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்.

யார் எதை சொன்னாலும் இந்த ரோபோ செய்துவிடும். இதற்கு உணர்வுகள் இல்லை என்பதால் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதெல்லாம் இந்த மிஷினுக்கு தெரியாது. அதனால் இது நம்மையே கொன்றுவிடும் பேராபத்து இருக்கிறது என்பதை சொல்லி வசீகரனின் பத்து வருடங்களின் உழைப்பை வீணாக்கிவிடுகிறார் போரா. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் மீண்டும் தன் ரோபோ பயணத்தை துவங்குகிறார் வசீகரன்.



இதுதான் கோபம், இதுதான் சந்தோஷம் என ஒவ்வொரு உணர்வையும் சிட்டி ரோபோவின் மெமரியில் பதிவு செய்கிறார் வசீகரன். இப்போது காதல், கஷ்டம், இஷ்டம் என எல்லா விஷயங்களையும் சிட்டியால் உணர முடியும். ஆனால்... இதுவே வசீகரனுக்கு பெரிய ஆப்பு வைத்து விடுகிறது.

வசீகரனின் காதலியான சனாவிற்கு (ஐஸ்வர்யா ராய்) சிட்டி ரோபோ மீது அவ்வளவு இஷ்டம். சிட்டி மேல் உள்ள பிரியத்தினால் அதற்கு எப்போதும் போல முத்தம் வைக்கிறார் சனா. முத்தம் வைத்ததும் சிட்டியின் உணர்வுகள் வெடிக்கிறது. சனாவின் அழகில் மயங்கிவிடும் சிட்டி ரோபோ, அவரை காதலிப்பதாக ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்புகிறார். தன்னை உருவாக்கிய வசீகரனுக்கு வில்லனாய் மாற்றம் பெறுகிறது சிட்டி ரோபோ!

இனி தான் அதிரடி ஆட்டம்...

அப்படி காதலித்தாலும் உன்னை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும் என சிட்டிக்கு சனா புரியவைத்தாலும், செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே... என் மெமரியை உன்னில் பொருத்திவிட்டால், மனித உயிருக்கும் மிஷினுக்கும் பிறந்த உலகின் முதல் குழந்தையாக அது இருக்கும் என விளக்குகிறது சிட்டி ரோபோ!!



இந்தச் சமயம் பார்த்து சிட்டி ரோபோவை தன் வசம் கொண்டுவந்து உலகத்தை அழிக்க கூடிய அத்தனை சக்தியையும் அதில் பொருத்தி விடுகிறார் வசீகரனின் எதிரி போரா. சிட்டி ரோபோ செய்யும் அத்தனை அழிவுகளின் பழியும் வசீகரன் மேல் வந்துவிடும் என்பதே இந்த சூழ்ச்சிக்கு காரணம். ஆனால், சிட்டி ரோபோவின் தீய சக்தியால் போராவிற்கே அழிவு வருகிறது.

தான் காதலிக்கும் சனாவை அடைய எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் சிட்டி தன்னை போலவே இன்னொரு ரோபோவை உருவாக்குகிறது. இப்படியே ஒன்று இரண்டாக இரண்டு நான்காக, சிட்டி சொல் பேச்சை கேட்கும் பல நூற்றுக்கணக்கான ரோபோக்கள் உருவாகி விடுகிறது.

பல பேரை வீழ்த்திய பிறகு திருமண மேடையில் இருந்து சனாவை அதிரடியாக தன்னோடு இழுத்து வருகிறான் சிட்டி. பல கொலைகள், கோடிக்கணக்கான பொருட்சேதம் என சிட்டியின் அட்டகாசத்தால் நகரமே சின்னாபின்னம் ஆகிவிடுகிறது.

எப்படியோ ஒரு வழியாக சிட்டியின் மெமரியில் இருக்கும் தீய சக்தியை எடுத்து சனாவையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார் வசீகரன். முடிவாக இந்த ரோபோ இப்போது உள்ள சுழலில் நமக்கு தேவை இல்லை என தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். தன் பத்து வருடங்களின் உழைப்பா சிட்டி ரோபோவை வசீகரன் அழித்துவிட்டாரா? வாழவிட்டாரா? என்பது சஸ்பென்ஸ்!

கடைசி 40 நிமிடங்கள் பல இடங்களில் காது கிழிய விசில் சத்தங்களை அள்ளிக்கொள்கிறார் ரஜினி. ரஜினிக்கே உரிய வில்லத் தனத்தோடு 'மெஹே...' என ஆடு மாதிரி கத்தினதும் தியேட்டரே அதிருது.

'அரிமா அரிமா...' பாடலில் வரும் ரஜினி 'மாஸ்'. ஆனால் இந்த ரஜினிக்காக படத்தின் கடைசி பாடல் வரை ரசிகர்கள் காக்க வேண்டியிருக்கிறது. பரதம், வெஸ்டர்ன், கதக், கராத்தே, ஜிம்னாஸ்டிக் என ரோபோ 'சூப்பர் ஸ்டார்' செம செம கலக்கல் ஆட்டம்.

பல ரஜினிகள் சேர்ந்து ஒரு பெரிய 'ஜெயன்ட்' மாதிரி உருவாவனதும் 'எப்பா ஆஆ...' இது தான் ஷங்கர்! என கைதட்ட வைக்கிறார் இயக்குனர்.

ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் சனா கேரக்டரை நம்ம தமன்னாவோ, திரிஷாவோ செய்திருக்க முடியும். ஆனால், ஒரு பெண்ணை பார்த்ததும் மிஷினுக்கே காதல் வருகிறது என்றால், அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருக்க வேண்டும்! அதை ஐஸ் ரொம்ப அழகா செய்திருக்கிறார்.

சந்தானம், கருணாஸ் என இரண்டு காமெடியன்களின் காமெடியை விட, ரோபோ ரஜினியின் காமெடி தூள். டி.வி.யை போடு என சொன்னதும் டி.வி.யை கிழே போட்டு 'டமார்...' என உடைப்பதில் தொடங்கி சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் காமெடிகள் பல.

சில இடங்களில் சுஜாதா தனியாக தெரிகிறார். ரோபோவிடம் ஒரு கேள்வி, கடவுள் இருக்கிறாரா? அதற்கு ரோபோ கேட்கிறது, கடவுள் என்பவர் யார்? கடவுள் என்பவர் நம்மை படைத்தவர். மீண்டும் ரோபோ சொல்கிறது, என்னை படைத்தவர் வசீகரன், வசீகரன் இருக்கிறார். அப்படிஎன்றால் கடவுள் இருக்கிறார் என்று தானே அர்த்தம்.

இன்னொரு காட்சி... ரோபோ பேசுகிறது, எனக்குள் இருக்கும் உணர்வுகளை சுலபமாக நீக்கிவிட்டீர்கள். ஆனால், உங்களுக்குள் கோபம், பொறாமை, பொய், கர்வம் என ஏகப்பட்ட உணர்வுகள் இருக்கிறது, அதை உங்களால் அவ்வளவு சுலபமாக நீக்கமுடியாது என்பதே பரிதாபம்! என்று ரோபோ சொல்வது சூப்பர் வசனம்.

ரகுமான் இருக்கும் போது இசைக்கு என்ன பஞ்சம்! ரோபோடிக் இசையை இளம் இசையமைப்பாளர்களில் அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன்.

முதல் பாதியின் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்...

இந்த அசாத்தியமான உழைப்பை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய ஷங்கருக்கு ஒரு சல்யூட்!